இலண்டன் தமிழ் மொழி மற்றும்
பண்பாட்டுப் பள்ளி
தமிழ்ப்பள்ளியின் நோக்கம்
இங்கிலாந்தில் வாழும் தமிழர்கள் தங்களுடைய மரபுகளையும், விழுமியங்களையும், பண்பாட்டையும் பாதுகாக்கவேண்டும். இத்தேவையை நிறைவேற்ற அவர்கள் தங்கள் மொழி, கலை, இலக்கியம் இவற்றோடு நீங்காத தொடர்புடன் வாழ வேண்டும். இங்கிலாந்தில் தழுவி வாழும் தமிழ் மக்களின் பண்பாட்டுத் தேவைகளை மனதிற்கொண்டு குழந்தைகளுக்கான தமிழ்ப்பள்ளி இயங்கிவருகின்றது. இத்தேவையை நிறைவேற்ற அவர்கள் தங்கள் குழந்தைகளை மொழி, கலை, இயக்கியம் இவற்றோடு நீங்காத தொடர்புடன் வாழ வைப்பதே எங்கள் தமிழ் பள்ளியின் நோக்கம்.
தமிழ்ப்பள்ளியின் குறிக்கோள்
- தமிழ்ச் சமுதாயத்தினர்க்கும், தமிழியலில் ஈடுபாடுள்ள மற்றையோர்க்கும் தமிழ்மொழி இலக்கியம், பண்பாடு பற்றிய கல்வி கற்க வழிவகுத்தல்.
- அவர்கள் தேவைக்கேற்ப பாடத் திட்டங்களை உருவாக்கி அளித்தல். அவர்கள் தங்கள் பாரம்பரியத்தோடு தொடர்புகொண்டு வாழத்துணைபுரிதல்.
- தமிழ் கற்கும் கல்வியறிவுச் சாதனங்களைத் தொகுத்து அவற்றைப் பரவலாகத் தமிழ் மக்களுக்கு வழங்கும் முயற்சிகளை மேற்கொள்ளுதல்.
- தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு தொடர்பான பாடத்திட்டங்களை வகுத்தல். கேள்வியறிவுக்காகவோ அல்லது சான்றிதழ் பட்டம் பெறுவதற்காகவோ கற்போருக்கு இப்பாடங்களைக் கற்க வாய்ப்பளித்தல்.
“பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலம் செய்துங்கக் கரிமுகத்துமணியே நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா” – என ஔவை தமிழுக்காக இறைஞ்சுகிறார்.
“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்!” – என பாரதி தமிழுக்கு அணி செய்து அதன் மேன்மையை கூறி இருக்கிறார்.
“தமிழுக்கு அமுதென்று பேர் – அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்!” – எனப் பாரதிதாசன் தமிழை தனது உயிராய் சித்தரித்து இருக்கிரார்.
இப்படி கவிஞர், அறிஞர், சான்றோர், ஆன்றோர் என அனைவரும் தமிழின் பெருமையை முழங்கியது அறிந்ததே! அத்தமிழை அதன் சிறப்போடு சிறுவர்களுக்கும், குழந்தைகளுக்கும் கற்பிப்பதே தமிழ்ச் சங்கத்தின் நோக்கமாகும்.
தமிழ்ச் சங்கத்தின் ஓர் அங்கமான தமிழ்மொழி மற்றும் பண்பாட்டுப் பள்ளியில் ஒலி, ஒளி நாடாக்களைக்கொண்டு தமிழில் உறையாட, மற்றும் எழுதப் படிக்க, மொழியாற்றல் மிக்க ஆசிரியர்களால் கொண்டு சிறப்பாகப் பயிற்சியளிக்கப்படுகிறது.
உங்கள் குழந்தைகளின் மொழியாற்றலை வளர்க்க சங்கத்திற்கு ஓர் வாய்ப்பு கொடுங்கள்.
சிறிய வயதில் நமது குழந்தைகள் நம் தாய்மொழியை மறக்கும் நிலைமை ஏற்படலாம். எனவே ஒவ்வொரு தமிழ் குடிமக்களும் தங்களின் குழந்தைகளை தமிழ்ப்பள்ளியில் அவசியம் சேர்க்க வேண்டும்.
தாய்மொழி தனி மனித வெற்றி (அ) வளர்ச்சிக்கு வழிசெய்வதில் பங்கு கொள்வது மட்டுமல்லாமல், புலம் பெயர்ந்த தேசிய இளங்களின் கலாச்சாரத்திற்கு அடித்தள விளைவது தாய்மொழியே! அதாவது தாய்மொழி பயிற்றுவிப்பது என்பது கலாச்சார விருட்சத்திற்கு விதையூண்டலே! அதன்படி நம் குழந்தைகள் தாய்மொழி அறி்ந்தாலும் அதன்பால் பற்றுக் கொள்தலும் அவர்கள் வாழ்விற்கு வளம் சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. நம் தமிழ்ப்பள்ளி, 20.11.83ல் தொடங்கி இன்று வரை பிரகாசமாய், தமிழ் ஒளி மழையை பொழிந்து கொண்டிருக்கின்றது. இலண்டன் தமிழ்ச் சங்கத்தின் இலண்டன் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரப் பள்ளி ஈஸ்ட் ஹாமில் உள்ள பிளாஷட் பள்ளியில் ஞாயிறு தோறும் நடைபெற்று வருகின்றது.
ஐரோப்பிய சூழலுக்கு ஏற்றதாய் நம் தமிழ் சிறுவர் சிறுமியர் பேசுதல், படித்தல் மற்றும் எழுதுதல் ஆகிய திறன்களில் வலுவூட்டும் வண்ணம் பாடங்கள் வடிவமைக்கப்பட்டு தமிழ் மொழி சிறந்த முறையில் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றது.ஒன்று முதல் G.C.E வகுப்பு வரைக்கான பாடங்கள் சுமார் 120 மாணவர் கல்வி பயிலுகின்றனர்.
நம் குழந்தைகள் பட்டறிவுக்கு ஏற்றார் போலும் ஐரோப்பிய கல்வி முறை திட்டங்கள் அணுகு முறையோடும் சீரிய முறையில் கற்றுக்கொடுக்கவல்ல ஆசிரியர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகின்றனர்.
பள்ளியின் G.C.E க்கான இறுதித்தேர்வு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தாரால் நடத்தப்படுகின்றது. இந்த தேர்வை நமது பிள்ளைகள் முன்னர் வெகு தொலைவு சென்று எழுத வேண்டியிருந்தது. அதைக் கவனத்தில் கொண்டு, எந்தச் சிரமுமின்றி எழுத ஏதுவாக அந்த தேர்வு மையம் தமிழ்ச் சங்கத்திலேயே தொடங்கப்பட்டு கடந்த பத்து வருடங்களாக இயங்கி வருகின்றது.இதன் மூலம் ஒவ்வொரு வருடமும் மாணவர்களின் எண்ணிக்கைப் பெருக வேண்டும். அதனால் வளர்ச்சி காண வேண்டும். அதுவே எங்கள் ஆக்கம்! என்றும் அயராத எங்கள் நோக்கமும் கூட. எங்கள் சேவைத் தொடர உங்கள் நல்லாசிகள் தேவை என்பதை அறிவீர்!
“கற்றலும் அதுவழி நிற்றலும், தாய்மொழி பெற்றலும் அதன்பால் பற்றை உற்றலும் இப் பரந்த உலகில் சிறப்புடையது வேறு உளதோ?”
எனும் சான்றோர் வாக்கின் படி தமிழை உங்கள் குழந்தைகளுக்கு கற்பீர். அதன் புகழில் நிற்பீர்! தமிழை மதிப்போம்! அதை நாளும் துதிப்போம்!